Saturday, November 11, 2006

காசுக்காகச் சிறகுவிரிக்காத கவிக்குயிலவன்!








அன்புடையீர்,
வணக்கம்.

கண்ணதாசன் கலைமன்றத்தின் சார்பில் என் தாசன்
கண்ணதாசனுக்கு விழா எடுப்பது அறிந்து

பெருமகிழ்வெய்துகிறேன். விழா சிறக்க எனதினிய
வாழ்த்துக்கள்; ஈடுபாடுள்ள அனைவர்க்கும் என்
சிரம்தாழ்த்துக்கள்! விழாமலருக்காய் ஒரு
கட்டுரையும் ஒரு கவிதையும் இணைத்துள்ளேன்;
பொருந்தும் என்று கருதும் பட்சத்தில் வெளியிட்டால்
மகிழ்வேன்; பொருந்தாதெனில் புறம்தள்ள
தயங்கவேண்டாம்.
வாழ்த்துக்களும் வணக்கமும்.
அன்பு மிக,
ஆல்பர்ட்.














*******************************************************************************
விருதுகளுக்காகச் சோரம் போகாத,

காசுக்காகச் சிறகுவிரிக்காத

கவிக்குயிலவன்!

ஐயோ, கொடுமையே! வெங்கொடுமைச்
சாக்காடே! சூடுதனியாத இளங்குருதி குடிப்பதற்கோ,
பாடுங்கவி மகனின் பக்கத்தில் நெருங்கிவந்தாய்?

முப்போதும் தமிழ் பாடும் முன்னோடி எங்கே?
சிந்தையில் படை திரட்டும் இருவிழிகள் எங்கே?
சிரித்தபடி வரவேற்கும் மகாகவிஞன் எங்கே
மறைந்தானா?

இனி, வரவே மாட்டானா? எழுதுகின்ற கையும்,
எழுதுகோலும் நடுங்கித் துடிக்கின்றனவே!....
தென்றல் இதழில் 1959ல் பட்டுக்கோட்டையார்
மறைந்தபோது கவிஞர் கண்ணதாசன் எழுதிய
கண்ணீர் வரிகள்தான் இது!

கவிஞரை எண்ணும்போதெல்லாம் இந்தவரிகள்தான்
என்னில் மின்னி நிற்கும்!

கண்ணதாசன் முன்பைவிட இப்போதுதான்
அதிகமாக உயிர் வாழ்கிறார். எதார்த்தமாகச்
சொல்ல வேண்டுமானால் அவர் உருமாற்றம்
ஆகிய பழைய பாடல்களில் அசரீரிக் குரலாக
இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறார் என்று
சொல்லலாம்.

கல்யாணம், கச்சேரி, கூட்டம், மாநாடு என்று எல்லா
இடங்களிலும் கவிஞர் எழுதிய பாடல்கள் ஒரு
டி.எம்.எஸ் குரலிலோ, சீர்காழியோ,
எஸ்.பி.பாலசுப்பிரமணியோ ஏற்ற இறக்கமாக
பாடிக்கொண்டிருப்பதை இப்போதும் கேட்கலாம்.
எப்போதும் கேட்கலாம்!

பட்டிதொட்டியெல்லாம்....

மனித வாழ்க்கையை அலசி ஆராய்ந்து, மனிதர்கள்
மறந்ததை எல்லாம் நினைவுபடுத்திய கவிஞரவர்!
சிந்திக்கத் தெரியாதவர்கள் பற்றியும், வாழ்க்கையில்
வாழமுடியாது போராடிக்கொண்டிருந்தவர்கள்
பற்றியும் அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

அவர் சிந்தனைகள் பாடலாக வடிவம் பெற்று
மலர்ந்தபோது பட்டிதொட்டியெல்லாம்
வாழுகின்ற பாமரர்கள் கேட்டுக்கேட்டு
தங்கள் வாழ்க்கையின் கோணல்களையும்,
கொடுமைகளையும் குழப்பங்களையும்
புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள்.

கவிப்பேரரசரின் வலிமை, எளிமை, சிந்தனை
நிறைந்த பாடல்வரிகள் கிராமங்களில் முனு
முனுக்கப்படுகிறது; வாய்க்கால் வரப்புகளில்
தொண்டை கிழியப் பாடுகிறார் ஒரு விவசாயி!
சைக்கிளை மிதித்துக்கொண்டே மாணவன்
ஒருவன் ஏற்ற இறக்கத்தோடு
பாடிப்போகிறான்; களை பிடுங்கும்போதும்,
நாற்று நடும்போதும் பெண்கள் நாணியும்
கோணியும் பாடுகிறபாட்டுக்கள் கவியரசரின்
பாட்டுக்கள்தான்!

ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜி,பாடல்களாகத்தான்
ஏழைகளிடம் இன்னும் நிற்கிறது!


ஒருவித நெருடல்....!

இப்போது சில நேரங்களில் வானொலி,
இணையம், தொலைக்காட்சிகளில் இன்றைய
சில சினிமாப் பாடல்களைக் கேட்க நேரும்போது,
அந்தப் பாடல்களில் தெறிக்கும் ஆபாச
வார்த்தைகளையும், சமூகத்திற்குப் பயன்படாத
செய்திகளையும் கேட்டு...ஓ..நம்ம கவியரசர்
இன்றிருந்தால் இப்படிப்பட்ட தரக்குறைவான
பாடல்களைக் கேட்டிருக்க முடியாதே" என்று
எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!
ஒருவித நெருடலை இன்றைய திரையிசைப்
பாடல்கள் உருவாக்கியிருக்கின்றன.

கவித்துவம் மிக்க சொற்களை எல்லாம்
தொலைத்துவிட்டு மேற்கத்திய வேர்களின்
வலைக்குள் சிக்கிக்கொண்டு பரிதாபகரமான
குரலில் ஏதேதோ கத்திக்கொண்டிருக்கிறது.

கவிதைகளின் ஜீவனை இசைக்கருவிகள் குடித்து
ஏப்பம் விடுகிற காலம் இது!

இசையின் ஏகாதிபத்தியத்தையும் மீறி,
கருத்தாழமிக்க எளிய வரிகளால் தனித்துவம்
பெற்றவை கவியரசரின் பாடல்கள் என்றால்
அது மிகையில்லை!
கவிஞர் இல்லாமல் போய்விட்டது அந்தக்
காலத்தைவிட இந்தக் காலத்தில் ஒரு பெரும்
இழப்பு. காலடிக் கலாச்சாரத்தை எந்தக் கவிஞனும்
கண்டு கொள்ளாத இந்தக் காலத்தில் இன்னும்
சொல்லப்போனால் கவிதைகளைத் தலைவர்களின்
காலடிகளில் போடும் அடிமைக் கவிஞர்கள் வாழும்
இந்தக் காலத்தில் இந்தச் சமதர்மக் கவிஞன்
நம்மிடையே இல்லாமற் போனது இந்தச் சமூகத்துக்கே
பேரிழப்பாகும்.

விருதுகளுக்காகச் சோரம் போகாதவன்; காசுக்காகச்
சிறகுவிரிக்காத கவிக்குயிலவன்!

தமிழனை மீட்க.....!

நான் படிக்கின்ற காலத்தில் திரைத்துரையில்
கவிஞரின் சமதர்மத் தத்துவமும், ஏழை பங்காளப்
போக்கும் இசையோடு ஒலித்துக்கொண்டிருந்தது.
அவரைப் பார்க்கப் பேச எனக்கு அவ்வளவு ஆசை...
பூம்புகாரிலும், சென்னையில் கவிதா ஓட்டலிலும்
பார்க்க வாய்ப்பு கிடைத்தது; அது கிட்ட நெருங்க
இயலாத எட்ட நின்று பார்க்கும் வாய்ப்பாக
நழுவிப்போனதை இன்று எண்ணினாலும்
இது எனக்கு இன்னொரு பெரிய குறையாகவே
மனதை வாட்டுகிறது!

தேவைப்படும் இந்தக் காலத்தில் நமது கவிதைப்
பேரரசர் இல்லாமல் போனதை நினைக்கும்போது
நமது பொறுப்பு அதிகமாகிறது.

மனிதனை மனிதன் மதிக்கும் - மனிதனின் காலில்
மனிதன் விழா, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன் தோன்றி மூத்ததாலோ என்னவோ இன்னும்
கற்காலத்திலேயே இருக்கும் தமிழனை மீட்க வேண்டியது
நமது கடமையாகிறது.... இந்தக் கடமையே நமது
கவிப்பேரரசருக்கு நாம் செலுத்தும் திதியாகும்! "

காலவண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால்
அந்தக் கவிஞரின் நினைவு, நெஞ்சுள்ளார் நினைவுகளில்
எல்லாம் நின்று நிலவுகிறது!

இயற்கை நம் கவியரசரை நம்மிடமிருந்து தட்டிப்பறித்துச் சென்றுவிட்டது; ஆனால், அவன் பாடல்களை, அந்தப்
பாடல்களில் அவன் சொன்ன கருத்துக்களை எமன்
அல்ல எந்தக் கொம்பனாலும் தமிழ் உள்ளவரை
நம்மிடமிருந்து பறிக்க இயலாது!


-ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா.
நிலை பேசி:262-650-8950
அலை பேசி:414-803-3759

(Albert Fernando,
3604 Bayberry Dr.
Waukesha. WI.53189-6833. )


முத்தையா, நீ முத்து அய்யா...!

( கவிதை)
சிறுகூடல் பட்டியில் பிறந்து
சிங்காரத் திரையுலகில்
சிங்கம் போலுலவி சீரிய
சிந்தனை (க) விதைகளை தூவி
சிகாகோ சென்று உயரப் பறந்தவன் நீ!

பாடல்களால் பல்கலைக்கழகம் கண்டாய்!
பாமரர்களையும் நின் பாவால் ஈர்த்தாய்!-உன்
பார்வைகள் அலசி ஆய்ந்து உதிர்த்த -திரைப்
பாடல்களால் அழியாப் புகழின் உச்சியில் நீ!


விருது களுக்காய் சோரம் போகாதவன் நீ!
கருது கிறதைக் கலங்காமல் சொல்லியவன் நீ!
மிருது வான மனதுக்குச் சொந்தக்காரன் நீ!
எருது போல எவருக்கும் அஞ்சாநெஞ்சன் நீ!


தத்து வங்களை எளிமைக் கவிதையாய்
சத்துக் கவிதையாய் சிந்தாமல் சிதறாமல்
முத்து முத்தாய் கோர்த்து பாமாலை சூடி
சித்தம் கலங்கியோர் பித்தம் தெளிவித்தாய்!


முத்தையா, நீ முத்து அய்யா - திரையுலகின்
சொத்தையா நீ! தத்துவங்கள் சொன்ன
வித்தகன் அய்யா நீ! எனக்கு மரணமில்லையென்ற
புத்தன் நீ! சித்தன் நீ! அத்தனையும் நீ!!!

-ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.